உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்பாட்டில் இல்லாத கிணற்றை மூட கீரப்பாக்கம் மக்கள் கோரிக்கை

பயன்பாட்டில் இல்லாத கிணற்றை மூட கீரப்பாக்கம் மக்கள் கோரிக்கை

கீரப்பாக்கம்: கீரப்பாக்கம் விளையாட்டுத் திடலில், பயன்பாடின்றி உள்ள கிணற்றை மூட வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு, விநாயகபுரம் பகுதியில், விளையாட்டுத் திடல் உள்ளது. இந்த விளையாட்டுத் திடலில், 2016ம் ஆண்டு, 13 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், கிணற்றில் போதிய அளவு நீர் சுரக்காததால், கிடப்பில் போடப்பட்டது. அத்துடன், கிணறு தரை மட்டத்தில் இருந்ததால், பாதுகாப்பிற்காக மேல் பகுதியில், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது, சில இடத்தில் இரும்பு தடுப்பு சேதமடைந்து, பெரிய அளவிற்கு ஓட்டை உள்ளது. இந்த விளையாட்டு திடலில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் போது, எதிர்பாராத விதமாக பந்து கிணற்றுக்குள் விழும் போது, அதை எடுக்க முயற்சிக்கின்றனர். இதனால், உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன், மேய்ச்சலுக்காக இந்த பகுதிக்கு வரும் கால்நடைகள், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பதும், அடிக்கடி நிகழ்கிறது. இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் ஆபத்தை அறியாமல், கிணற்றை எட்டிப் பார்ப்பது, அதற்குள் கற்களை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், மழைக்காலங்களில் விளையாட்டுத் திடலில் நீர் நிரம்பினால், கிணறு இருப்பதே தெரியாது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயனின்றி உள்ள இந்த தரைமட்ட கிணற்றை மூடும்படி பலமுறை வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மண் கொட்டி மூட, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி