ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டி இடிக்க கீழக்கரணை மக்கள் கோரிக்கை
மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சி கீழக்கரணையில், குடியிருப்புகளுக்கு இடையே பயன்பாடில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி 17வது வார்டு கீழக்கரணை பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சிப்காட் பகுதியில் வேலை பார்த்து வரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடை எதிரில், 30 ஆண்டுகளுக்கு முன் மக்களின் குடிநீர் தேவைக்காக 60,000 லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. தற்போது, நீர் தேக்க தொட்டி கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடைபெறும் முன், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.