கோதண்ட ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ஊனமாஞ்சேரி,ஊனமாஞ்சேரியில், 1,000 ஆண்டு பழமையான கோதண்டராமர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ஊனமாஞ்சேரி கிராமத்தில், கோதண்டராமர் சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவில் குளம், கர்பகிரஹம், அர்த மண்டபம், மஹா மண்டபம், திருமடப்பள்ளி மற்றும் சுற்றுப்பிரகாரங்கள் புனரமைக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 27ம் தேதி, மாலை 6:05 மணிக்கு, வாஸ்து ஹோமத்துடன், வேத பிரபந்தம் செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து, யாகசாலை, கடஸ்தாபனம், சாற்றுமுறை, நவகலச திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நேற்று முன்தினம் செய்யப்பட்டன. நேற்று காலை 6:30 மணிக்கு யாகசாலை, சதுர்ஷ ஆராதனம், மஹா சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. காலை 9:10 மணிக்கு கடம் புறப்பாடு துவக்கப்பட்டு, காலை 9:50 மணிக்கு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.