லஷ்மிநாராயண பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
திருக்கழுக்குன்றம்:புலிக்குன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், மஹா கும்பாபிஷேம் விமரிசையாக நடைபெற்றது.திருக்கழுக்குன்றம் அடுத்த புலிக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லஷ்மி நாராயண பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஸ்ரீனிவாசன், ராமர், சுதர்சனர், லஷ்மி ஹயக்ரீவர், லஷ்மி நரசிம்மர், தன்வந்திரி, ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், தும்பிக்கை ஆழ்வார் ஆகிய சுவாமியரும், வெளியே நவக்கிரகங்களும் வீற்றுள்ளனர்.கடந்த 2012ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின், மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 13ம் தேதி, பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம், ஹோமம் உள்ளிட்டவை துவக்கப்பட்டன.நேற்று காலை வழிபாட்டு பூஜை சடங்குகள் நிறைவுபெற்று, 9:00 - 9:30 மணிக்குள், அனைத்து சன்னிதிகளிலும் புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.