பிரபல ரவுடியுடன் சிறையில் சதித்திட்டம் தீட்டிய வக்கீல் கைது
அரும்பாக்கம், சிறையில் உள்ள, ஆயுள் தண்டனை கைதியான பிரபல ரவுடி ராதாவை சந்தித்து சதித்திட்டம் திட்டி, கூலிப்படைகளுக்கு கத்திகள் 'சப்ளை' செய்த, தாம்பரம் வழக்கறிஞர் சிக்கினார்.சென்னையில், பிரபல ரவுடியாக வலம் வந்தவர் அரும்பாக்கம் ராதா எனும் ரவுடி ராதாகிருஷ்ணன். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரனின் ஆள் எனக் கூறப்படுகிறது. ராதா, வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.இவர் சிறையில் இருந்தபடியே, வெளியில் கூலிப்படைகளை வைத்து, பல்வேறு சம்பவங்களை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ராதாவின் கூலிப்படை கூட்டாளியான அரும்பாக்கத்தைச் சேர்ந்த மெர்லின், 32, என்பவரை, அரும்பாக்கம் போலீசார் கடந்த மாதம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், ராதாவின் சட்டவிரோத செயல்களுக்கு, தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கிஷோர்குமார், 30, என்பவர் உடந்தையாக இருந்தது அம்பலமானது. அதேபோல்,கூலிப்படைகளுக்கு கத்திகள் 'சப்ளை' செய்வதும் தெரிந்தது. சிறையில் உள்ள ரவுடி ராதாவை சமீபத்தில்சந்தித்து, குற்றசம்பவத்திற்காக சதித்திட்டம் திட்டியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் கிஷோர்குமாரை, அரும்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, விசாரிக்கின்றனர்.