ஒரு மாதமாக குறைந்த மின்னழுத்த பிரச்னை புது மின்மாற்றி அமைக்க வேண்டுகோள்
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, 6வது வார்டு அபிராமி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.கடந்த ஒரு மாதத்திற்கு முன், வீராணம் சாலை அருகே இருந்த மின்மாற்றி பழுதடைந்தது.இதனால், இப்பகுதிக்கு மின்சாரம் தற்காலிகமாக வழங்க, அருகே உள்ள பகுதி மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால் போதிய மின்திறன் கிடைக்காததால், குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் சாதனங்களை இயக்க முடியாமல் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து பொறுத்தாமல் உள்ளதால், இந்த மின் அழுந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:அபிராமி நகர், வீராணம் சாலையில், மின்மாற்றி பழுதடைந்தது. அதை இன்னும் பழுது நீக்கம் செய்யாமல் உள்ளனர். இதனால், மாற்று பகுதி மின்மாற்றியிலிருந்து வழங்கும் மின்சாரம் போதுமானதாக இல்லை.கோடைக்காலமாக உள்ள நிலையில், குறைந்த மின் அழுத்த பிரச்னை ஏற்படுகிறது.குறிப்பாக, மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, குறைந்த மின் அழுத்தம் பிரச்னை அதிகமாக உள்ளது. இதனால், மின் சாதன பொருட்களை இயக்க முடியவில்லை. அடிக்கடி பழுதடைகின்றன. இரவு நேரங்களில் துாங்கும் போது, மின் விசிறி, 'ஏசி' உள்ளிட்டவற்றை இயக்க முடியாமல், தவித்து வருகிறோம். மின் விசிறிகள் இயங்காததால் இரவு நேரத்தில் வீட்டின் வெளியே துாங்கும் நிலை ஏற்படுகிறது. மின் அழுத்த பிரச்னையை சரி செய்யவும், புதிய மின் மாற்றி அமைக்கவும் மின் வாரிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதே நிலை நீடித்தால், எங்கள் மக்கள் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.