உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் நகராட்சி கூட்டத்தில் களேபரம்: தி.மு.க., கவுன்சிலர்கள் இரு பிரிவாகி காவல் நிலையத்தில் புகார்

மதுராந்தகம் நகராட்சி கூட்டத்தில் களேபரம்: தி.மு.க., கவுன்சிலர்கள் இரு பிரிவாகி காவல் நிலையத்தில் புகார்

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி களேபரமான நிலையில், இரு தரப்பாக பிரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், சலசலப்பு ஏற்பட்டது.மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இங்குள்ள அனைவரும், தி.மு.க., கவுன்சிலர்கள். இந்நிலையில் நேற்று, தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் மலர்விழி தலைமையில், மாதாந்திர கூட்டம் நடந்தது. அப்போது, நகராட்சி துணைத் தலைவரும், 11வது வார்டு கவுன்சிலருமான சிவலிங்கம், அவரது இருக்கையை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து, அங்கு அமர்ந்திருந்தார்.கூட்டம் துவங்கியவுடன், தன் வார்டு கோரிக்கைகளை முன்வைத்து, சிவலிங்கம் பேசியுள்ளார்.அப்போது, 24வது வார்டு கவுன்சிலர் மூர்த்தி என்பவர், இருக்கை மாற்றியது குறித்து பேசி, தேவையின்றி குறுக்கீடு செய்துள்ளார்.இதற்கு, சக கவுன்சிலர்களான 12வது வார்டு ஆண்ட்ரோ சிரில் ராஜ், 22வது வார்டு சரளா ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.அப்போது, நகராட்சி தலைவரின் கணவரும், 2வது வார்டு கவுன்சிலருமான குமார், தகாத வார்த்தையில் ஒருமையில் பேசி, கவுன்சிலர் சரளாவை வெளியே செல்லும்படி கூறியுள்ளார்.இதற்கு 1, 18, 12, 10, 16 மற்றும் 14வது வார்டு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, அனைத்து கவுன்சிலர்களையும் ஒருமையில், தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.இதைத்தொடர்ந்து, கூட்டம் நடைபெறும் போதே களேபரம் ஆனதால், நகராட்சி துணைத் தலைவர் சிவலிங்கம் தலைமையில், மேற்கண்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பின், நகராட்சி கூட்டத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுராந்தகம் காவல் நிலையத்தில், நேற்று மதியம் புகார் அளித்தனர்.இதேபோல், நகராட்சி துணைத் தலைவர் சிவலிங்கம், வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், இருக்கையை மாற்றி அமைத்து, நகராட்சி கூட்டத்தில் பங்கேற்றார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, வாக்குவாதம் ஏற்பட்டது. நகராட்சி கூட்டத்தின் நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என, நகராட்சி தலைவர் மலர்விழியின் கணவரும், கவுன்சிலருமான குமார் தரப்பு, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இரண்டு புகார்களையும் பெற்றுக் கொண்ட மதுராந்தகம் போலீசார், புகாரின்படி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.மதுராந்தகம் நகராட்சியைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர்கள், இரண்டு பிரிவாக பிரிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததால், சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி