தண்டலம் கங்கையம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்தில் கங்கையம்மன், அய்யனார், சப்த கன்னியர் கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது. தண்டலம் கிராமத்திலுள்ள கங்கையம்மன் கோவில், அய்யனார் மற்றும் சப்த கன்னியர் கோவிலில் திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, யாகசாலை அமைக்க நேற்று முன்தினம் பந்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை 9:00 மணியளவில் கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, கோ பூஜை, நவகிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதற்கால யாக பூஜைகள், சிலைகள் பிரதிஷ்டை, கீத, தாள உபசாரம் நடந்தன. இன்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் காலத்தில் மங்கல இசை, தம்பதிகள் சங்கல்பம், நாடி சந்தனம், மஹா பூர்ணாஹுதி, மகா மூல மந்திர ஹோமம் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடும். 9:45 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10:00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள், ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.