மாமல்லை - செங்கை தேசிய நெடுஞ்சாலை...என்னாச்சு!:6 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழித்தட மேம்பாட்டிற்கு முடிவெடுத்து, இத்தடத்தில் வாகனங்கள் கடப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது, வாகன போக்குவரத்து அதிகரிக்கும் சூழலில், தேசிய நெடுஞ்சாலை மாற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பேரூராட்சி சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை காண, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகின்றனர்.சுற்றுலா முக்கியத்துவ பகுதி போக்குவரத்திற்கு, மேம்பட்ட சாலை அமைப்பது முக்கியம். சுற்றுலா மேம்படாத 30 ஆண்டுகளுக்கு முன், இங்கு பயணியர் வருகை மிக குறைவு.சென்னை - மாமல்லபுரம் போக்குவரத்திற்கு, திருப்போரூர் வழியாக, 58 கி.மீ.,க்கு அமைந்துள்ள பழைய மாமல்லபுரம் சாலையே பிரதானமாக இருந்தது.அதன்பின், கோவளம் உள்ளிட்ட கடலோர பகுதிகள் போக்குவரத்து கருதி, சென்னை - மாமல்லபுரம் கடலோர சாலை அமைக்கப்பட்டது.அதன்பின், மாமல்லபுரத்தில் இருந்து புதுப்பட்டினம், கூவத்துார், கடப்பாக்கம், மரக்காணம் என, படிப்படியாக புதுச்சேரி வரை, கிழக்கு கடற்கரை சாலையாக நீட்டிக்கப்பட்டது.மாமல்லபுரம் - செங்கல்பட்டு போக்குவரத்திற்கு, திருக்கழுக்குன்றம் வழியாக சாலை உள்ளது. துவக்கத்தில் சாலைகள் ஒருவழிப்பாதையாக இருந்தன.நாளடைவில், மாமல்லபுரம் சுற்றுலா தலம் மேம்பட்டதால், கடலோர பகுதிகள் வளர்ச்சியடைந்து, வாகன போக்குவரத்து அதிகரித்தது.இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை, சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை, இருவழித்தடமாக, கடந்த 1998ல் மேம்படுத்தியது.பின், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ், இவ்வழித்தடம் கொண்டு வரப்பட்டு, 2002 முதல் சுங்க கட்டண சாலையாக நிர்வகிக்கப்படுகிறது.இந்நிறுவனம், சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே, 32 கி.மீ.,க்கு, கடந்த 2018ல் நான்கு வழித்தடமாக மேம்படுத்தியது.இதற்கிடையே, சென்னை - புதுச்சேரி தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி, 95 கி.மீ.,யை, அதே ஆண்டில், தேசிய நெடுஞ்சாலையாக, மத்திய அரசு மாற்றி அறிவித்தது.இதை நான்கு வழித்தடமாக மேம்படுத்தும் பணிகள், தற்போது தீவிரமாக நடக்கிறது. இதுமட்டுமின்றி, மாமல்லபுரம் - செங்கல்பட்டு வழித்தடம் உள்ளிட்ட 19 தடங்களை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து, தமிழக அரசிடம் அனுமதியும் பெற்றது.திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு தடம், சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வழித்தடத்தின் ஒரு பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வெவ்வேறான இரண்டு தடங்களையும் ஒன்றிணைத்தே, மாமல்லபுரம் - செங்கல்பட்டு வழித்தடமாக மாற்றி மேம்படுத்த முடிவெடுத்தது.மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் தடத்தின் மைய பகுதியான எச்சூர் பகுதியில், இந்த வழியாக ஒரு நாளில் கடந்து செல்லும் பஸ், வேன், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கணக்கிடுவதற்கு, நவீன கேமரா அமைக்கப்பட்டு, ஏழு நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், ஆறு ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படவில்லை. இத்தடத்தில் வாகன போக்குவரத்து, தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.தமிழகத்தின் வேலுார் உள்ளிட்ட வடமேற்கு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணியர், இந்த வழியாக மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். இதில், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு வரை மட்டுமே, 10 மீ., அகல சாலை உள்ளது. திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் இடையே, குறுகிய சாலையே உள்ளது.வடகடம்பாடி, நந்திமாநகர், குழிப்பாந்தண்டலம், எச்சூர், புலிகுன்றம், கொத்திமங்கலம் ஆகிய இடங்களில், விபத்து அபாய குறுகிய வளைவுகளும் உள்ளது. மேலும், இந்த குறுகிய வளைவுகளால், அதிகளவில் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.எனவே, மாமல்லபுரத்தின் சுற்றுலாவை மேம்படுத்த மாமல்லபுரம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.