முதியவரை கல்லால் தாக்கியவர் கைது
தாம்பரம்:மேற்கு தாம்பரம் அடுத்த திருநீர்மலை, ராஜகோபால் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 33. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த கிஷோர், 33, என்பவர்,கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், அவசரபண தேவைக்கு, 6 சவரன் நகையை பெற்றுள்ளார்.அதன்பின், பலமுறை நகையை திருப்பி தறுமாறு விக்னேஷ் கேட்டும், கிஷோர் நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், கிஷோருக்கு தொடர்பு கொண்ட விக்னேஷ், நகை குறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, கிஷோர் அவரது மனைவியுடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டார். அப்போது, தடுக்க வந்த விக்னேஷின் தந்தை குமார், 55, தலையில், கல்லால் கிஷோர் தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த குமார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்படி, தாம்பரம் போலீசார், கிஷோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.