டீயில் மயக்க மருந்து கலந்து தம்பதியிடம் திருடியவர் கைது
செங்கல்பட்டு, சூளைமேடைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 80. இவரது மனைவி கமலம், 76. இருவரும், விழுப்புரம் செல்ல கடந்த 29ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.அப்போது, இவர்களிடம் பேச்சு கொடுத்த நபர் டீ வாங்கி கொடுத்துள்ளார். பின், மூவரும் சென்னை -- கள்ளக்குறிச்சி செல்லும் தடம் எண்: 177 அரசு பேருந்தில் பயணம் செய்தனர்.அந்த நபரே, அவர்களுக்கு டிக்கெட் எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் தம்பதி மயக்கமடைந்த நிலையில், கமலத்தின் 8 சவரன் தங்க தாலி, 3 சவரன் வளையல்களை திருடி, பரனுார் சுங்கச்சாவடியில் இறங்கி, அந்த நபர் தப்பினார்.முதியவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததை கண்ட நடத்துநர், தம்பதியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.மேலும், தப்பிச் சென்றவர் பேருந்திலேயே தவறவிட்ட மொபைல் போனை, நடத்துநர் போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா, 46, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.