கலிவந்தபட்டு சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
மறைமலை நகர்: கலிவந்தபட்டு -- கூடலுார் சாலையில், ஜல்லி கற்களால் தடுமாறி பைக்கிலிருந்து விழுந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைமலை நகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 35; அதே பகுதியில் வாத்து வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 2ம் தேதி இரவு, 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில், மறைமலை நகரில் இருந்து கலிவந்தபட்டு நோக்கிச் சென்றார். கலிவந்தபட்டு -- கூடலுார் சாலையில் சென்ற போது, சாலையில் கொட்டப்பட்டு இருந்த ஜல்லிகளால் தடுமாறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் பிரபுவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து, பொத்தேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். எச்சரித்தது 'தினமலர்' கலிவந்தபட்டு -- கூடலுார் சாலை அமைக்க, நகராட்சி சார்பில் 2023ம் ஆண்டு, 51.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி 'டெண்டர்' விடப்பட்டது. ஆனால், சாலை அமைக்கும் பணிகள் துவங்கவில்லை. விபத்து ஏற்படும் முன், புதிய சாலை அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தார்ச்சாலை அமைக்காமல் ஜல்லிகற்கள் மட்டும் கொட்டப்பட்டதால், தற்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. பள்ளி வாகனங்கள் செல்லும் சாலை என்பதை கருத்தில் கொண்டு, விரைந்து இந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா வாங்க திருட்டு இது குறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் துவங்கி, பரனுார் ரயில் நிலையம் வரை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், இப்பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் அடிக்கடி தகராறு, ஏற்பட்டு வருகிறது. மேலும், கஞ்சா வாங்க பணத்திற்காக, ரயில் படிகளில் பயணம் செய்வோரை தடிகளால் தாக்கி, மொபைல் போன் பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.