உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் இறைச்சி கழிவு குவிப்பு செங்கை புறநகரில் சுகாதார சீர்கேடு

சாலையோரம் இறைச்சி கழிவு குவிப்பு செங்கை புறநகரில் சுகாதார சீர்கேடு

மறைமலை நகர்:செங்கல்பட்டு புற நகர் பகுதிகளில், நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டு வரும் இறைச்சி கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை‍, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு -- திருப்போரூர் உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலைகளின் ஓரம் உள்ள வனப்பகுதி, நீர்நிலைகள் மற்றும் காலி இடங்களில், தொடர்ந்து கோழி, ஆடு உள்ளிட்டவற்றின் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொத்தேரி, பேரமனுார், திருத்தேரி, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில், திருப்போரூர் சாலையிலுள்ள பாதை நகர் உள்ளிட்ட பகுதிகளில், இறைச்சி கழிவுகள் மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதிகளில் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த இறைச்சி கழிவுகளை சாப்பிட வரும் தெரு நாய்கள் சண்டையிட்டு, சாலையில் குறுக்கே செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புறநகர் பகுதிகளில், சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவது, தீராத பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை