உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அபாய நிலையில் மேடவாக்கம் மேம்பாலம் * அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

அபாய நிலையில் மேடவாக்கம் மேம்பாலம் * அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

மேடவாக்கம்:ஆங்காங்கே சிமென்ட் கலவை பெயர்ந்து, கான்கிரீட்டுக்காக போடப்பட்ட இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில், மேடவாக்கம் மேம்பாலம் சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.வேளச்சேரி -- தாம்பரம் பிரதான சாலையில், சோழிங்கநல்லுார், மாம்பாக்கம், பரங்கிமலை சந்திப்பை மையப்படுத்தி, மேடவாக்கத்தில், 133.10 கோடி ரூபாயில், இரண்டு மேம்பாலங்கள் கட்ட, 2015 ஆகஸ்டில் பணி வரையறை செய்யப்பட்டது.இதில், மேடவாக்கம் கூட்டு சாலை முதல் ஜல்லடையன்பேட்டை தனியார் வணிக வளாகம் வரை, 12 மீ., அகலத்தில், 2.03 கி.மீ., மேம்பாலம், 95.21 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை, 2022 மே 13ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே, இந்த பாலத்தின் மேற்புர சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்தது. அப்போது, நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, கான்கிரீட்டுக்காக போடப்பட்ட இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில், மேம்பாலம் சேதமடைந்துள்ளது.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:மேம்பாலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில், சிமென்ட் கலவை பெயர்ந்து, பள்ளங்கள் உருவாகி உள்ளன. சில இடங்களில், 10 செ.மீ., ஆழத்திற்கு பள்ளம் உருவாகி, கான்கிரீட்டுக்காக போடப்பட்ட இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள், இந்த இரும்பு கம்பிகள் மீது பயணித்து, வேகமாக கடந்து செல்வதால், அவை உடைந்து, விபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரும்பு கம்பிகளைச் சுற்றி உள்ள சிமென்ட் கலவை, மேலும் அதிகம் பெயர்ந்து, பாலத்தில் திடீர் பள்ளம் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, தமிழக நெடுஞ்சாலைத்துறையினர், மேம்பாலத்தை ஆய்வு செய்து, சேதமடைந்த இடங்களை, உடனே சீரமைப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை