மினி பஸ் சேவை துவக்கம்
திருப்போரூர், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நேற்று, சிற்றுந்துகள் சேவை துவக்க விழா நடந்தது. தமிழகம் முழுதும், 1999ம் ஆண்டு, நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக, இந்த பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, மீண்டும் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தனியார் சிற்றுந்துகள் இயக்க அரசு அனுமதியளித்து, தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று காலை, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, இரண்டு வழித்தடங்களில் சிற்றுந்து சேவை துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருப்போரூர் வி.சி., -எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ், திருப்போரூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் பையனுார் சேகர் ஆகியோர் பங்கேற்று, சிற்றுந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், தையூர் - இ.சி.ஆர்., நெம்மேலி தடம், ஆலத்துார் சிட்கோ - கோமாநகர் தடம் என, இரு தடங்களில், திருப்போரூர் பேருந்து நிலையம் வழியாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.