கிராமப்புறங்களுக்கு மினி பேருந்துகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வேண்டுகோள்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மினி பேருந்து இயக்குவது தொடர்பாக, உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, யுவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பேசியதாவது:மதுராந்தகம், முதுகரை வழியாக அச்சிறுபாக்கத்திற்கும், திண்டிவனத்திலிருந்து முருங்கை கிராமத்திற்கும் டவுன் பஸ் இயக்கப்பட்டது. அது, பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால், மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சி பகுதிக்கு, மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலுடன் செல்கின்றனர். இந்த ஊராட்சியில், ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் குடியேற்றமும் அதிகரித்து வருகிறது.அதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். கிராமப்புறங்களில் இயக்கப்படும் பேருந்துகள், காலை நேரத்தில் இயக்கப்படுவதில்லை.அதனால், அரசு மினி பேருந்துகள் இயக்க வேண்டும். கல்பாக்கம் -- அணைக்கட்டு வரை, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.இந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் உத்தரவிட்டார்.