உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நவீன எரியூட்டு மையம் பழுது அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலட்சியம்

நவீன எரியூட்டு மையம் பழுது அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலட்சியம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், பழுதான நவீன எரியூட்டு மையத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022- - 23ம் ஆண்டு, 1.35 கோடி ரூபாயில் நவீன எரியூட்டு மையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. கடந்த 2024ல் கட்டுமான பணிகள் முடிந்து, பிரேதங்களை எரித்து பரிசோதனைகள் நடந்தன. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இந்த நவீன எரியூட்டு மையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, 3,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில், உடல்கள் எரிக்கப்பட்டன. இதனால், அச்சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு செலவு குறைந்தது. இந்நிலையில் தற்போது, இந்த நவீன எரியூட்டு மையத்தில் காஸ் கசிவு பிரச்னையுடன், உடல்களை உள்ளே அனுப்பும் 'ட்ராலி' மற்றும் 'ஷட்டர்' பகுதி உள்ளிட்டவை பழுதாகி உள்ளன. அதனால், இறந்தவர்களின் உடல்களை மற்ற இடங்களில் உள்ள தகன மேடைக்கு கொண்டு செல்லக்கோரி, பேரூராட்சி நிர்வாகத்தினர் மக்களிடம் கூறி வருகின்றனர். இதன் காரணமாக, மக்களுக்கு கூடுதல் செலவாகிறது. நவீன எரியூட்டு மையம் பழுது குறித்து, பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலமுறை தெரிவித்தும், பேரூராட்சி செயல் அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து ஆய்வு செய்து, நவீன எரியூட்டு மையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை