சாலையோரத்தில் மின் விளக்கு இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
மறைமலை நகர்:பாலுார்- - வடக்குபட்டு சாலை 10 கி.மீ., நெடுஞ்சாலை. இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை பயன்படுத்தி ரெட்டிபாளையம், பாலுார், கொளத்துார், தேவனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து செல்லும் லாரிகளும் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலை ஓரம் ஊராட்சி நிர்வாகம் நிர்வாகம் சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் விளக்குகள் ஊராட்சி சார்பில் குறிப்பிட்ட துாரம் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. கிராமத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் விளக்குகள் இல்லாததால் அந்த பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பல இடங்களில் வளைவுகள், வேகத்தடை உள்ளிட்டவை இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தெரியாமல் தடுமாறி வருகின்றனர். மேலும் புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கும் நிலை உள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சுற்றியுள்ள கிராம மக்கள் டூ- - வீலர்களை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இருள் சூழ்ந்த சாலையில் செல்வது சவாலாக உள்ளது. எனவே விடுபட்ட பகுதியில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.