சாலையை ஆக்கிரமிக்கும் மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில் தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் செடி கொடிகள், சீமை கருவேலமரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வளர்ந்துள்ளன.இதன் காரணமாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதோடு அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து உள்ள செடி கொடிகள் மற்றும் மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.