ஜி.எஸ்.டி., சாலையில் மணல் துகள் விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி
கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், சிறு கற்கள் மற்றும் மண் துகள்கள் அதிக அளவில் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் முதல், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், ஆங்காங்கே பள்ளங்கள் அதிக அளவில் உள்ளன.அணுகு சாலையை பயன்படுத்த முடியாதபடி, மண் துகள்கள் மற்றும் சிறு, சிறு கற்களும் அதிகமாக தேங்கி உள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் தேங்கியுள்ள சிறு கற்களால் சறுக்கி விழுந்து, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை அவர்கள் சாலையை சீரமைக்காமலும், தேங்கியுள்ள மண் துகள்களை அகற்றாமலும் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், சாலையில் தேங்கியுள்ள மண் துகள்களை அகற்றவும், சாலையை சீரமைக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.