விநாயகா மிஷன் சட்ட பள்ளியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பையனுார் விநாயகா மிஷன் சட்ட பள்ளி வளாகத்தில், விநாயகா மிஷன் சட்ட பள்ளி மற்றும் சர்வதேச சமரச தீர்வு மையம் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று நடந்தது.விநாயகா சட்ட பள்ளி டீன் ஆனந்த் பத்மநாபன் தலைமை வகித்தார்.தொழில் சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக உதவி டீன் ஜர்னா ஜக்தியானி வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளர்களாக, சர்வதேச சமரச தீர்வு மைய தலைவர், மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் சேகர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன், வழக்கறிஞர் கே.ஆர்.ஏ.முத்துகிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளில், சட்ட பள்ளி டீன் ஆனந்த் பத்மநாபன் மற்றும் சர்வதேச சமரச தீர்வு மைய தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் சேகர் கையெழுத்திட்டு, மாற்றிக் கொண்டனர். இவ்விரு நிறுவனங்கள் சார்பில், பல்வேறு பிரச்னைகளுக்கு நீதிமன்றத்திற்கு செல்லாமல், எவ்வாறு சமரசமாக பேசி தீர்வு காண்பது என்பது குறித்த செயல்பாடுகள் முன்னெடுப்பட உள்ளன.தொடர்ந்து வழக்கறிஞர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.விழாவில், உதவி பேராசிரியர்கள் சிஞ்சினி சென், ஹர்தீஜ் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், எஸ்.ஆர்.ஸ்ரீராம் சேகர் பேசியதாவது:பன்னாட்டு சமரச தீர்வு மையத்தின் வாயிலாக ஒரு பிரச்னையை சுமுகமாக எப்படி சரிசெய்வது என்பது தொடர்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடந்துள்ளது.வழக்கறிஞர்கள் ஒரு பிரச்னையை, நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி தான் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல. நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பே, ஒரு பிரச்னையை சமரசமாக, மக்கள் மத்தியில் ஒரு நல்லுறவாக, அமைதியாக பேசி சரிசெய்யலாம். பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிக்க வேண்டும் என்றால் 300 ஆண்டுகள் தேவைப்படுகிறது.இதனால் அரசாங்கம், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என, எல்லா நீதிபதிகளும் ஒரு முடிவு எடுத்துள்ளனர். வழக்குகளை தீர்வு செய்து முடிக்க வேண்டும் என்றால், பல ஆண்டுகள் ஆகும். ஒரு தீர்ப்பு சரியான நேரத்தில் கொடுக்கப்படவில்லை என்றால் அது முறையான தீர்ப்பாக இருக்காது.மக்கள் தொகை, வியாபாரம், பொருளாதாரம் என அதிகமாக வளரும் போது, பிரச்னைகளும் அதிகமாகின்றன.இந்த மாதிரி பிரச்னைகள் அதிகரிக்கும் போது, அதற்கு சமரச தீர்வு தேவைப்படுகிறது.எனவே, சமரச தீர்வு மையங்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளன.எனவே, இந்த விநாயகா மிஷன் சட்ட கல்லுாரியும், சர்வதேச சமரச தீர்வு மையமும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.சட்டம் படித்த மாணவர்கள் ஒரு பிரச்னையை நீதிமன்றத்தை தாண்டி மனிதாபிமான, தார்மீக அடிப்படையில் சரிசெய்து தீர்வு காணலாம் என, ஒரு முறையான பயிற்சி அளிக்கப்படும்.குடும்பம், வியாபாரம் என அனைத்திலும் ஏற்படும் பிரச்னைகளை சமரசமாக பேசி தீர்வு காண்பதே, எங்கள் நோக்கமாக உள்ளது. சமரசம் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதும் எங்கள் குரலாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன் பேசியதாவது:விநாயகா மிஷன் சட்ட பள்ளி மற்றும் சர்வதேச சமரச தீர்வு மையம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி அமலுக்கு வந்ததுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் சமரசம் சார்ந்த பயிற்சிகளிலும், மற்ற செயல்பாடுகளிலும் மென்மேலும் மேன்மை பெற வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.