முகையூர் கள்ளழக பெருமாள் பாலாற்றில் இறங்கி கோலாகல உற்சவம்
மாமல்லபுரம் : முகையூர் கள்ளழக பெருமாள், சித்திரை பவுர்ணமி வைபவமாக, பாலாற்றில் இறங்கி கோலாகல உற்சவம் கண்டார்.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த முகையூரில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இப்பகுதியினர் வடதிருமாலிருஞ்சோலை கோவிலாக வழிபடுகின்றனர். கள்ளழக பெருமாள், 2012 முதல், சித்திரை பவுர்ணமி வைபவமாக, பாலாற்றில் இறங்கி உற்சவம் கண்டு அருள்பாலிக்கிறார்.இந்நாளான நேற்று, கள்ளழகர் கோலாகல உற்சவமாக ஆற்றில் இறங்கினார். காலை, கோவிலில் சுவாமியருக்கு திருமஞ்சன வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாள இசை, பஜனை பாடல்கள் முழக்கத்துடன், கோவிலிலிருந்து புறப்பட்டார்.கூவத்துார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை அடைந்து, ஆண்டாள் சூடிய மாலையை அவருக்கு அளித்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் புறப்பட்டு, வாயலுார் பாலாற்றை அடைந்தார். ஆற்றங்கரையில் திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, ஆண்டாள் மாலையை அவருக்கு சூட்டி, வேத பாராயணம், இசை முழக்கத்துடன், காலை 10:00 மணிக்கு கள்ளழகர் ஆற்றில் இறங்கி உற்சவம் கண்டு அருள்பாலித்தார்.பாலாற்று பாலத்தில் ஆற்றை கடந்து வேப்பஞ்சேரி, கூவத்துார், வடபட்டினம், தென்பட்டினம் பகுதிகள் வழியே, கோவிந்தா... கோவிந்தா... என, பக்தர்கள் முழங்கி, வீதியுலா சென்று, மாலை கோவிலை அடைந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.