காவல்துறையில் பெண்கள் தேசிய மாநாடு 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை, சென்னை அடுத்த வண்டலுார், ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடந்த காவல் துறையில் பெண்கள், 11வது தேசிய மாநாட்டில், பெண் போலீசார் நலன், பணி முறைகள், அதிகாரப் பகிர்வு சார்ந்து, 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தேசிய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 2002ம் ஆண்டு முதல் 'காவல் துறையில் பெண்கள்' என்ற தலைப்பில், தேசிய அளவிலான மாநாடு, இரு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.இதன் 11வது மாநாடு, வண்டலுார் தாலுகா, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது.தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, பெண் காவல் துறை உயரதிகாரிகள், மத்திய அரசு பிரதிநிதிகள் என, 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், காவல் துறையில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்னைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.இறுதியாக, காவல் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, ஆண், பெண் அதிகாரிகளுக்கு சாத்தியமான முறையில் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தல், அதிக எண்ணிக்கையில் பெண் கவாத்து பயிற்சியாளர்களை நியமித்தல் உட்பட, 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிறைவு விழா நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, விழா சிறப்பு மலரை வெளியிட்டு பேசியதாவது:தமிழக காவல் துறையில், பெண்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக, 2023ல் விழா முன்னெடுக்கப்பட்டது.அதில், பெண் போலீசாருக்கு காலை 'ரோல் கால்' நேரத்தை தளர்த்துவது, தனி ஓய்வறைகள், தங்கும் வசதி, குழந்தை பராமரிப்பு மையம், இடமாற்றம், விடுப்பு மற்றும் பணி நியமன கொள்கை என, ஒன்பது திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்களில், 43 சதவீதம் பெண் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இது, மற்ற மாநிலங்களை விட அதிகம்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டி.ஜி.பி., சீமா அகர்வால் வரவேற்புரை ஆற்றினார். தமிழக காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நன்றியுரையாற்றினார்.