மழைநீர் வடிகால்வாய் அமைக்க நாவலுார் கிராமத்தினர் கோரிக்கை
திருப்போரூர்:நாவலுாரில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில், நாவலுார் ஊராட்சி உள்ளது. இங்குள்ள பஜனை கோவில் நான்காவது குறுக்குத் தெருவில், மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதி இல்லை. மழை நேரத்தில் குளம்போல சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மழைநீரில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தற்போது மழை அவ்வப்போது பெய்வதால் சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குகிறது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. இத்தெருவில், 250 மீட்டருக்கு மூடிய நிலையிலான வடிகால்வாய் அமைத்து, தாழம்பூர் பிரதான சாலையில் செல்லும் மழைநீர் வடிகால்வாய் உடன் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மழைநீர் இந்த தெருவில் தேங்காது. இதுதொடர்பாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.