உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நுாறு நாள் வேலை வழங்க வேண்டி வடக்கு செய்யூர் மக்கள் மறியல்

நுாறு நாள் வேலை வழங்க வேண்டி வடக்கு செய்யூர் மக்கள் மறியல்

செய்யூர்: நுாறு நாள் வேலை வழங்க வேண்டி, வடக்கு செய்யூர் கிராம மக்கள், பவுஞ்சூர் - செய்யூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லத்துார் ஒன்றியத்தில், 41 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூரைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள், இந்த திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு, இவர்களுக்கு குறைந்த நாட்களே வேலை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நுாறு நாள் முழுமையாக வேலை வழங்க வலியுறுத்தி, வடக்கு செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை 11:30 மணியளவில், பவுஞ்சூர் - செய்யூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். மேலும், அடுத்த சில நாட்களில் வேலை ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி