பறிமுதல் வாகனங்களால் இடையூறு நடவடிக்கை எடுங்க ஆபீசர்ஸ்!
மறைமலை நகர்,மறைமலை நகர் சிப்காட் செல்லும் பெரியார் சாலையில், மறைமலைநகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த சாலையில் தினமும், தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள், ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள இடங்களில், வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்துடன், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருவோரின் வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் தொழிற்சாலைகளில் பணி முடித்து வரும் வாகன ஓட்டிகள், இங்கு விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருட்டு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையம் எதிரில் நிறுத்தப்பட்டுள்ள 'டாரஸ்' லாரி, விபத்து ஏற்படும் வகையில் உள்ளது.எனவே, இந்த லாரி உள்ளிட்ட போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்களை முறையாக அகற்றவும், யாரும் உரிமை கோராத வாகனங்களை முறையாக ஏலம் விடவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.