உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உணவு பாதுகாப்பில் கோட்டைவிடும் அதிகாரிகள்...அலட்சியம் : குட்கா பொருட்களை பிடிப்பதில் மட்டுமே மும்முரம்

உணவு பாதுகாப்பில் கோட்டைவிடும் அதிகாரிகள்...அலட்சியம் : குட்கா பொருட்களை பிடிப்பதில் மட்டுமே மும்முரம்

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், நாளுக்கு நாள் உணவு பொருட்களின் தரம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில், குட்கா பொருட்களை பிடிப்பதில் மட்டுமே அதிகாரிகள் மும்முரம் காட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கியுள்ளனர்.இவர்கள் ஒரகடம், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், தாம்பரம் 'சிப்காட்' பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் தனியாக வசிப்பதால், மூன்று வேளை உணவையும் தொழிற்சாலை கேன்டீன், ஹோட்டல்கள், விடுதி கேன்டீன்களில் சாப்பிடுகின்றனர்.இங்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர், காய்கறி, எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்டவை தரமானதாக இல்லை. பரனுார், செங்கல்பட்டு சந்தைகளில் இருந்து, இரண்டாம் தரமான காய்கறிகளே அதிக அளவில் வாங்கி வந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.அத்துடன், சுவை மற்றும் நிறத்தைக் கூட்ட,'அஜினமோட்டோ' மற்றும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.சாதம் நன்கு வெள்ளையாக தெரிய வேண்டும் என்பதற்காக, அரிசியில் சுண்ணாம்பு கலந்த தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மேலும், துரித உணவகங்களில் சமைக்கும் இடம் பெரும்பாலும் சாலையை ஒட்டியே இருப்பதால், உணவு சமைக்கும் போது மசாலா பொடி, மிளகாய் பொடி உள்ளிட்வை காற்றில் பறந்து பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.அதேபோல், கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் நொறுக்கு தீனி வகைகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை, பிரபலமான நிறுவனங்களின் பெயர்களை மாற்றி, வேறு பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பள்ளி வளாகங்களுக்கு அருகே, இதுபோன்ற நொறுக்கு தீனி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.மேலும், 'பேக்கரி'களில் விற்பனை செய்யப்படும்,'பப்ஸ்' உள்ளிட்ட உணவு பண்டங்களும், தயாரித்து பல நாட்கள் ஆனதாகவே இருப்பதாக கூறப்படுகிறது.செங்கல்பட்டு புறநகரில், மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரி உள்ளிட்டவற்றில் தரமற்ற உணவுகளை சாப்பிடுவதால், பொதுமக்களுக்கு வயிறு உப்புசம், வயிற்று வலி உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.ஹோட்டல்கள், கடைகளில் ஆய்வு நடத்த வேண்டிய உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் முறையாக ஈடுபடாததால், இதுபோன்ற உணவு அத்துமீறல் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஒவ்வொரு பகுதியிலும் சுழற்சி முறையில் சோதனை செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு புறநகரில் குட்கா, பான் மசாலா பொருட்களை பிடிப்பதில் மட்டுமே, அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். உணவகங்கள், தொழிற்சாலை கேன்டீன் உள்ளிட்ட ஹோட்டல்களுக்கு, இவர்கள் ஆய்வுக்கு செல்வதே இல்லை. இதனால், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட,'அஜினமோட்டோ, மயோனைஸ்' போன்ற பொருட்கள், உணவகங்களில் தடையின்றி பயன்படுத்தப்படுகின்றன. அதனால் ஹோட்டல், கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மறைமலை நகரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கூறியதாவது:இந்த பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சில துரித உணவகங்களில், பழைய கோழி இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. இரவு தயாரிக்கப்பட்ட பரோட்டா, மறுநாள் காலை பரிமாறப்படுகிறது. வீட்டு உபயோக மளிகை பொருட்களான மிளகு, வெல்லம், புளி, மஞ்சள் துாள், டீ துாள் போன்றவற்றில், அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, மிளகில் அதிக அளவில் பப்பாளி விதை கலந்து விற்பனை செய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு பகுதியில் உணவு தொடர்பாக பிரச்னை எழுந்தால், அப்போது மட்டும் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். மற்ற நேரங்களில், கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.புகார் மீது நடவடிக்கை

அதிக அளவில் கலப்படம்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றியம், நகராட்சி வாரியாக, 17 உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில், இரு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. உணவு பொருட்கள், உணவகங்களின் தரம் குறித்து வரும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

அதிக அளவில் கலப்படம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூன் 08, 2025 08:57

குட்காவப் பிடிச்சா கரை படிந்த அரசதிகாரிகள் விற்பனைய மறைச்சி பணத்தை கொள்ளை அடிக்கலாம். உணவப் பிடிச்சா இவங்களுக்கு இலவச சாப்பாடு கிடைக்காதில்ல சாமி. . வெளியில சுவைக்கு மட்டும் சாப்பிடறத மக்களும் நிறுத்தனும். என்ன போடறாங்க, எதுல செய்யறாங்க, எத்தனை பேரு கை படுது உணவுலனு கொஞ்சம் யோசிக்கணும். சூடா நம்ம முன்னாடி போட்டாலும் ஆறிப்போனதத்தான் திருப்பியும் சூடு பண்றாங்கனு அறியனும் மக்கள்


முக்கிய வீடியோ