| ADDED : நவ 28, 2025 03:53 AM
கல்பாக்கம்: அணுசக்தி துறை குடியிருப்பு நகரியங்களில் வாக்காளர்களை கண்டறிய முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திண்டாடுகின்றனர். கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி தொழிற்வளாகத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் , சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலத்தோர் அதிக அளவில் பணிபுரிகின்றனர். அணுசக்தி துறையின் கல்பாக்கம் மற்றும் அணுபுரம் ஆகிய நகரியங்களில், இவர்கள் வசிக்கி ன்றனர். தற்போது, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறும் நிலையில், ஏராளமானோரின் முகவரியை கண்டுபிடிக்க முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருகின்றனர். அதாவது இங்கு பணியாற்றுவோர், தமிழகத்தின் கூடங்குளம், பிற மாநில அணுசக்தி நிறுவனங்களுக்கு மாற்றப்படுவர் . பிற பகுதிகளில் இருந்து பலர், கல்பாக்கம் பகுதிக்கும் மாற்றப்படுவர். கல்பாக்கத்தில் வசிப்பவர்கள், அணுபுரம் பகுதிக்கு மாற்றப்படுவர். இச்சூழலில், வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏராளமானோரின் முகவரியை கண்டறிய முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர். குறி ப்பாக, அணுபுரத்தில் மிக உயரமான பல மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்களில், வாக்காளர்களை தேடுவது கடினமாக உள்ளதால், தவித்து வருகின்றனர்.