மேலும் செய்திகள்
சுற்றுச்சுவரில்லாத கால்நடை மருத்துவமனை
03-Nov-2025
வண்டலுார்: வண்டலுார் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள், 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள கால்நடை மருத்துவமனை அருகே, மீண்டும் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டும் பணி துவக்கியுள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள நெடுங்குன்றம், சதானந்தபுரம், கொளப்பாக்கம், ஆலப்பாக்கம், புத்துார் என, ஐந்து கிராமங்களில், 60,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, 5 கி.மீ., துாரத்தில், வண்டலுார் -- கேளம்பாக்கம் பிரதான சாலை அருகே, இந்த கிராமங்கள் அமைந்துள்ளதால், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஐந்து கிராம மக்களும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, 30 ஆண்டுகளாக, கோரிக்கை வைத்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளி, சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி கொளப்பாக்கம் கிராமத்திற்கு வந்த அரசு அதிகாரிகள், அரசுக்குச் சொந்தமான இடத்தில் பூமி பூஜை போட்டுள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் விசாரித்த போது, கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பூஜை நடந்ததாகவும் கூறியுள்ளனர். அப்போது, 'நாங்கள் கேட்டது மக்களுக்கான மருத்துவமனை; நீங்கள் கட்டுவதோ கால்நடை மருத்துவமனை. இங்கே கடந்த 30 ஆண்டுகளாக கால்நடை மருத்துவமனை இயங்கி வருவது கூட உங்களுக்குத் தெரியாதா' எனக் கூறி, அருகிலிருந்த கால்நடை மருத்துவமனையை அதிகாரிகளிடம் காண்பித்துள்ளனர். அத்துடன், இங்கு சமூக நலக்கூடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில், மீண்டும் கால்நடை மருத்துவமனை கட்ட பூமி பூஜை போட்டதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய நெடுங்குன்றம் ஊராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பதே, இங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதற்காக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, பலமுறை கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். தவிர, உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், சமூக நலக்கூடம் அமைக்கவும் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, எங்களுக்கு தேவையே இல்லாத கால்நடை மருத்துவமனை கட்ட, தற்போது பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே இங்கு கால்நடை மருத்துவமனை செயல்பாட்டில் இருக்கும் போது, புதிதாக கால்நடை மருத்துவமனை எதற்கு? தற்போது காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, கூடுவாஞ்சேரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி உள்ளது. தவிர, கர்ப்பிணியருக்கு அரசின் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் கிடைக்க, 18 கி.மீ., துாரத்திலுள்ள கல்வாய் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டி உள்ளது. இப்போது, சர்வே எண் 171/1ல், அரசு நிலத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்ட, 2,500 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்வே எண்ணில், 111 சென்ட் நிலம் இருந்தது. பின், தனியார் ஆக்கிரமிப்பில் 40 சென்ட் நிலம் காணாமல் போய்விட்டது. அந்த நிலத்தை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம், சமூக நலக்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெடுங்குன்றம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100க்கும் மேற்பட்டோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என, பல கிராமங்களிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, கொளப்பாக்கம் கிராமத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 'சி.எல்.ஏ.,' அனுமதி பெற்று, 2,500 சதுர அடியில், மேம்படுத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து கால்நடைகளுக்கும், அறுவை சிகிச்சை உட்பட உயரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
03-Nov-2025