உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல் கொள்முதல் நிலையம்: நெல்லியில் வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையம்: நெல்லியில் வலியுறுத்தல்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே நெல்லி ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லி, மங்கலம், சித்தாமூர், நெல்வாய் கூட்டுச்சாலை, நெல்வாய், குமாரவாடி, கரிக்கிலி, புழுதிவாக்கம், நடராஜபுரம். பள்ளியாகரம், கருணாகரச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிணற்றுப் பாசனம் மற்றும் ஏரி பாசனத்தின் மூலமாக, 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், குருவை நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது நெல் விளைந்து, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை அப்பகுதிகளில் உள்ள நெற்களம் மற்றும் வீடுகளில் பாதுகாத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, எதிர்பாராத நேரங்களில் மழை பெய்து வருவதால், களத்துமேட்டில் உள்ள நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் நெல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் பகுதியில், அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். இதனால், இந்த இடத்திலும் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து, தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். அடிக்கடி மழை பெய்து வருவதால், நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, நெல்லியில் கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி