அரசு குடியிருப்பு சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பீதி
திருவான்மியூர்:திருவான்மியூர், பெரியார் நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், பழைய குடியிருப்பை இடித்து அகற்றி, 62.92 கோடி ரூபாயில், 330 சதுர அடிக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.அந்த குடியிருப்புகளில், 480 பயனாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டன. குடியிருப்பு கட்டப்பட்ட சில மாதங்களில் இருந்து, கட்டடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.கட்டட சுவர்களில் விரிசல் விட்டு காணப்படுவதாகவும், கட்டடங்கள் தரமின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.இந்நிலையில், நேற்று இ- - பிளாக், நான்காவது தளத்தில், 52 எண் கொண்ட வீட்டில், வளர்மதி என்பவர் அவரது பேரனுடன் இருந்த போது, வீட்டின் மேற்பூச்சு பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.இதனால், பதறிப்போன அவர், குழந்தையுடன் வெளியேறி தப்பினார். கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுக்குள், கட்டடத்தின் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம், குடியிருப்பு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், கட்டடத்தின் உறுதித் தன்மையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.