உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பீதி

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பீதி

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் ஆப்பூர், சேந்தமங்கலம், தாளிமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில், சேந்தமங்கலம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு, சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேந்தமங்கலத்தில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள மின் கம்பங்களில் உள்ள மின்கம்பிகள், மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதற்கு தற்காலிக தீர்வாக, கிராம மக்கள் மூங்கில் கம்புகளை நட்டு முட்டுக்கொடுத்து, மின்கம்பிகளை உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலையின் அணுகுசாலை ஓரத்தில் லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுத்துவிட்டுச் செல்கின்றனர். சேந்தமங்கலம் கிராமத்தில், சாலையோரம் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், வாகனங்கள் இதில் உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், சரக்கு வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து, ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். எனவே, வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை