காத்திருப்போர் பட்டியலுக்கு பரங்கிமலை இன்ஸ்., மாற்றம்
ஆலந்துார்:கொடுத்த புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி, பரங்கிமலை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர், காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பரங்கிமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் பாலன். இவரை, நேற்று திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து, இணை கமிஷனர் பரிந்துரையின்படி, கமிஷனர் உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் பாலன் இடமாற்றத்திற்கான காரணம் குறித்து போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:கடந்த இரண்டு நாட்களுக்கு முன், நிலப்பிரச்னை ஒன்றில் நீதிமன்ற உத்தரவு பெற்ற ஒருவர், தன் இடத்திற்கு செல்ல எதிர் தரப்பினர் அனுமதி மறுப்பதாக, பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி, புகார்தாரர் இணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இன்பெக்டரை அழைத்த இணை கமிஷனர், ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதற்காக கண்டித்துள்ளார்.இன்ஸ்பெக்டரும், 'சீருடைக்கு பயந்து பணி செய்கிறேன்' என பேசியதாக கூறப்படுகிறது. நிலைமை மோசமாகவே, துணை கமிஷனர் இன்ஸ்பெக்டர் பாலனை வெளியே அழைத்து வந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் பாலன் மீது, 'ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது' என, 'விளக்கம் கேட்பு நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டது.