2ம் கட்ட மெட்ரோவில் பன்னடுக்கு வாகன நிறுத்த வசதி
சென்னை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், போரூர், சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட பெரிய மெட்ரோ ரயில் நிலையங்களில், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதியை கொண்டுவர, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டாம் கட்ட திட்டத்தில், 116 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து இயக்கும்போது, 2028ல், சென்னையில் எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.தினமும் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்வார்கள். மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு, 40 நிமிடங்களில் செல்ல முடியும். முதல்கட்ட மெட்ரோவில் போதிய அளவில் வாகன நிறுத்த வசதி இல்லாதது குறித்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் வாகன நிறுத்த இடங்களை தவிர, அருகில் இருக்கும் இடங்களையும் வாங்கி, கூடுதலாக வாகன நிறுத்தும் வசதி செய்ய உள்ளோம். இதுதவிர, மாதவரம், போரூர், பூந்தமல்லி, மயிலாப்பூர், சோழிங்கநல்லுார், மேடவாக்கம், கோயம்பேடு, சிறுசேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதியை கொண்டுவர உள்ளோம். இதற்கான, கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.