உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துார் -- திண்டிவனம் தடத்தில் நகர பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

மேல்மருவத்துார் -- திண்டிவனம் தடத்தில் நகர பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் - - திண்டிவனம் இடையே நகர பேருந்து இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்மருவத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், 70,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். அருகில் உள்ள திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர். இதில் மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் அரசு பேருந்துகள் செஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி செல்லும் விரைவு பேருந்துகள், அச்சிறுபாக்கத்தில் நின்று செல்வது இல்லை. இதனால், திண்டிவனம் பகுதிக்கு கல்வி பயில செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர், மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், மதுராந்தகத்தில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி வரை மட்டுமே, நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள பாதிரி, ஓங்கூர், கூச்சிக்கொளத்துார், கோனேரிக்குப்பம் பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. எனவே, மேல்மருவத்துாரில் இருந்து அச்சிறுபாக்கம் வழியாக, திண்டிவனம் பகுதிக்கு நகர பேருந்து இயக்கப்பட்டால், இப்பகுதி மக்கள் பயன் பெறுவர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி