அபாய நிலையில் நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, பேருந்து நிழற்குடை கட்டடம், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதை புனரமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய ஜி.எஸ்.டி., சாலையில், மின்வாரியம் பேருந்து நிறுத்தம் உள்ளது. தினமும் 2,000க்கும் மேற்பட்ட பயணியர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இதில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. தவிர, நிழற்குடை கட்டடம் முன் வளர்ந்து நிற்கும் மரம், பேருந்துகள் நின்று செல்ல இடையூறாக உள்ளது.மேலும், நிழற்குடையின் பின்புறம் கழிவுநீர், குப்பை தேங்கி, ஆரோக்கியமற்ற சூழலும் நிலவுகிறது.எனவே, நிழற்குடை கட்டடம் முன் உள்ள மரத்தை அகற்றவும், கட்டுமானத்தை செப்பனிடவும், கழிவுநீரை அகற்றவும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.