நிறுத்தப்பட்ட கல்பாக்கம்-தாம்பரம் பஸ் மீண்டும் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
மறைமலை நகர், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்பாக்கத்திற்கு, தடம் எண் 108 என்ற, விழுப்புரம் போக்குவரத்து கழக அரசு பேருந்து இயக்கப்பட்டது.இந்த பேருந்து பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பரனுார் டோல்கேட், செங்கல்பட்டு சென்று திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினம் வழியாக கல்பாக்கம் சென்றது.இந்த பேருந்து, மூன்றாண்டுகளுக்கு முன், முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோர், சிரமப்பட்டு வருகின்றனர்.அதே போல, புறநகர் பகுதிகளில் இருந்து கல்பாக்கம் செல்லவும், நேரடி பேருந்துகள் இல்லை. செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து மாற்றுப் பேருந்தில் செல்லும் நிலை உள்ளது.இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:தடம் எண் 108 பேருந்து முன்பு, 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டது. இந்த பேருந்தை தொழிலாளர்கள் மட்டுமின்றி, தாம்பரம் சந்தைக்கு தாங்கள் விளைவித்த காய்கறிகளை அனுப்ப, விவசாயிகளும் பயன்படுத்தி வந்தனர்.இந்த பேருந்து நிறுத்தப்பட்டதால், 1 மணி நேரத்தில் முடிய வேண்டிய பயணம், பேருந்துகள் மாறி செல்வதால், 3 மணி நேரமாகி சிரமப்படுகின்றனர்.சில நேரங்களில் மட்டும், இந்த பேருந்து காலை நேரத்தில் இயக்கப்படுகிறது.இந்த பேருந்து மீண்டும் இயக்கப்பட்டால், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த தடத்தில் நிறுத்தப்பட்ட, தடம் எண் 108 பேருந்துகளை மீண்டும் தொடர்ந்து இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.