| ADDED : ஜன 17, 2024 07:21 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம், 30 ஆண்டுகள் கடந்து பழமையானதால், அவற்றை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.இதனால், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் அருகே, தற்காலிக பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு 2 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டும்.இதனால், பஜார் வீதி, தேரடி வீதி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து செல்வோர், தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் குடிநீர் இல்லாததால், தாகத்தில் தவித்து வருகின்றனர்.இதனால், கடைகளில், தண்ணீர் பாட்டில் விலை கொடுத்து வாங்கி அருந்தும் நிலை உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போல், தற்காலிக பேருந்து நிலையத்திலும் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.