யு டியூப் பார்த்து செயின் பறிப்பு பட்டாபிராம் வாலிபர் சிக்கினார்
மாங்காடு, கடந்த மாதம், மாங்காடில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் 8 சவரன் செயினை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பறித்து சென்றார். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்தனர். இதில், பட்டாபிராம், கரிமேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 33, என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் தெரிய வந்ததாவது:வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த குணசேகரன், கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். கடனை அடைப்பதற்கு செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.இவர், செயின் பறிப்பில் எப்படி ஈடுபடலாம் என 'யு டியூபில்' பார்த்து, 2021ம் ஆண்டு முதல் இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஆவடி, திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில், செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, வாகனத்தின் 'நம்பர் பிளேட்'டை மறைத்து ஓட்டி வந்துள்ளார்.இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.அவரிடம் இருந்து, 10 சவரன் நகை, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.