உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அணுகுசாலையை மறித்து மீண்டும் பேனர் ஜி.எஸ்.டி., சாலையில் மக்கள் அவதி

அணுகுசாலையை மறித்து மீண்டும் பேனர் ஜி.எஸ்.டி., சாலையில் மக்கள் அவதி

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி, விபத்து அச்சத்தை உருவாக்குவதாக புகார் எழுந்துள்ளது.கடந்த பிப். 24 மற்றும் மார்ச் 1ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டு கட்சியினரும், சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுதும், பல இடங்களில் விளம்பர பேனர்களை வைத்தனர்.அதன்படி, வண்டலுார் முதல் கூடுவாஞ்சேரி இடையிலான ஜி.எஸ்.டி., சாலையில், அணுகுசாலை மற்றும் நடைமேடைகளை ஆக்கிரமித்து, 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன.பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப்பட்ட இந்த பேனர்கள் 45 நாட்கள் தாண்டியும் அகற்றப்படாமல் இருந்தன.இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடைக்காரர்கள் இடையூறுகளை சந்தித்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிட்ட நிலையில், பேனர்கள் அகற்றப்பட்டன.பின், முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளுக்காக மே 12ல், ஜி.எஸ்.டி., சாலை, நெல்லிக்குப்பம் சாலை, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பேனர்கள், உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.இந்நிலையில், ஜூன் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளுக்காக, ஜி.எஸ்.டி., சாலை, நெல்லிக்குப்பம் சாலையில், 20க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு, நேற்று வரை அகற்றப்படாமல் உள்ளன.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கருணாநிதி பிறந்த நாளுக்காக, பிரதான சாலை மட்டுமல்லாது, உட்புற பகுதியிலும் ஆங்காங்கே இதுபோன்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு, இன்னமும் அகற்றப்படவில்லை.சாலையோரம் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் விபத்துகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், பேனர்கள் தொடர்ந்து வைக்கப் படுகின்றன.பின், நீண்ட நாட்கள் அகற்றப்படாமல் இருப்பது, அரசியல் கட்சியினரின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது.ஓ.எம்.ஆர்., சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர், நேற்று முன்தினம் காற்றில் விழுந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதுபோல், ஜி.எஸ்.டி., சாலையிலும் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.அரசியல் கட்சி பேனர்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த பேனர்களை அகற்ற காவல் துறையினரும் அஞ்சுகிறார்கள்.எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பேனர்களை அகற்ற வேண்டும். தவிர, சாலையோரம் பேனர்கள் வைப்போருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை