மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இல்லாமல் ஆண்டார்குப்பம் மக்கள் அவதி
சித்தாமூர்:ஆண்டார்குப்பம் கிராமத்தில் மேல்நிலைத்தேக்கத் தொட்டி சேதமடைந்துள்ளதால், நேரடியாக குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். சித்தாமூர் அருகே வன்னியநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்குப்பம் கிராமத்தில் விநாயகர் கோவில் பின்புறம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இருந்தது. குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலமாக மேல்நிலைத் குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேல்நிலை தேக்கத்தொட்டியின் துாண்கள் சேதமடைந்து பலவீனமாக இருந்ததால், குடிநீர் கிணற்றில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய்களை இணைத்து மின்மோட்டார் வாயிலாக தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆண்டார்குப்பம் கிராமத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.