உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடியிருப்பு பகுதிக்குள் திருப்பிவிடப்பட்ட இ.சி.ஆர்., வெள்ளத்தால் கடும் பாதிப்பு மக்கள் போராட்ட எச்சரிக்கை

குடியிருப்பு பகுதிக்குள் திருப்பிவிடப்பட்ட இ.சி.ஆர்., வெள்ளத்தால் கடும் பாதிப்பு மக்கள் போராட்ட எச்சரிக்கை

திருவான்மியூர்: இ.சி.ஆரில் வடியும் மழைநீரை, குடியிருப்பு பகுதிக்குள் திருப்பிவிடுவதால், வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தால், சாலை மறியல் நடத்த வேண்டி வரும் என, திருவான்மியூர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடையாறு மண்டலம்,180வது வார்டு, திருவான்மியூர், சவுத் மாட தெரு, திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் நகரில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நகர்கள், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ளன. மணல் பரப்பான இடமானதால், மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த நகர்களில் வடியும் மழைநீர், பூமிக்குள் இறங்கிவிடும். இதனால், தெருக்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட வில்லை. இ.சி.ஆர்., மழைநீர் பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 300 மீட்டர் துாரத்தில் வடியும் மழைநீரை, சவுத் மாட தெரு வழியாக குழாய் அமைத்து, நெடுஞ் சாலைத்துறை திருப்பி விட்டுள்ளது. இதனால், 400க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இ.சி.ஆர்., கிழக்கு திசையில் வடியும் மழைநீரை, சாலையின் குறுக்கே வடிகால்வாய் அமைத்து, பகிங்ஹாம் கால்வாயில் திருப்பி விட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், சில அதிகாரிகள், மழைநீரை சவுத் மாட தெரு வழியாக திருப்பி விட்டுள்ளனர். இதனால், பெரும் பாதிப்பை சந்திக்கிறோம். வீடுகளில் வெள்ளம் புகுந்தால், இ.சி.ஆரில் சாலை மறியல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சாலை விரிவாக்கப் பணி நடப்பதால், அந்த பணி முடிந்த பின் தான் சாலையின் குறுக்கே வடிகால்வாய் கட்ட முடியும். சவுத் மாட தெருவில் வெள்ளம் தேங்கினால், மோட்டார் கொண்டு இறைக்க உதவ தயாராக இருக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை