கிராமவாசிகளுக்கான பணத்தில் கையாடல் தி.மு.க., நிர்வாகி மீது கலெக்டரிடம் மனு
செய்யூர்:தமிழ்நாடு கனிம நிறுவனம், முதலியார் குப்பம் கிராம மக்களுக்கு வழங்கிய பணத்தை, இடைக்கழிநாடு பேரூராட்சி தி.மு.க., பேரூர் செயலர் மோகன்தாஸ் கையாடல் செய்ய முயற்சி செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறியதாவது:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழக அரசின் 'டாமின்' என்ற கனிம நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாக செயல்படுகிறது.இப்பகுதியில் உள்ள மணல் பரப்பில் சிலிக்கான் தாது அதிகளவில் இருப்பதால், கனிம நிறுவனம் வாயிலாக 'டெண்டர்' விடப்பட்டு, இப்பகுதியில் பள்ளங்கள் தோண்டி மணல் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து சிலிக்கான் தாது மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.அதிகளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டதால், அருகே உள்ள கழிவெளி பகுதியில் இருந்து உப்புநீர் குடியிருப்பு பகுதி நிலத்தடி நீரில் கலந்து, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் சில ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் தாது மணல் ஏற்றுமதியை நிறுத்தினர்.கடந்த 2020ம் ஆண்டு ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுகளை மட்டும் எடுத்துச் செல்ல கிராமத்தினர் அனுமதி வழங்கினர்.இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் 1 டன் மணலுக்கு, 650 ரூபாய் கிராமத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணம், அப்போது தலைவராக இருந்த இடைக்கழிநாடு பேரூராட்சி தி.மு.க., பேரூர் செயலர் மோகன்தாஸ் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட மணல், 1 டன்னுக்கு 6,900 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ.,யில், தமிழக அரசின் டாமின் கனிம நிறுவனம் தகவல் வழங்கியுள்ளது.ஏற்கனவே வழங்கப்பட்ட பணம் மற்றும் தற்போது வழங்கப்பட்ட பணம் என, கிராம மக்களுக்கு சொந்தமான, 3.18 கோடி ரூபாய் பணம் மோகன்தாஸ் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.மொத்த பணத்தையும் கிராம மக்களுக்கு கணக்கு காட்டாமல் கையாடல் செய்ய முயற்சி செய்து வருகிறார்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பணத்தை மீட்டு கிராம வளர்ச்சிக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.