மாமல்லை வன்னியர் சங்க மாநாடு கட்டுப்பாடுகள் விதித்த போலீசார்
செங்கல்பட்டு:மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு, செங்கல்பட்டு மாவட்ட போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, வரும் 11ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில், வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு:சித்திரை முழு நிலவு பெருவிழாவிற்கு வருபவர்கள் வாகனங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து, வாகன அனுமதி சீட்டு பெற்றே, வர வேண்டும். சீட்டு இல்லாத வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், மாவட்ட காவல் துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லக் கூடாது.குறிப்பாக கடலுார், விழுப்புரம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை வழியாக மாநாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக வர வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு வருபவர்கள் வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, பொது இடங்களில் மது அருந்தக் கூடாது.ஜோதி ஓட்டம் போன்ற நிகழ்வுகள் எங்கும் நடத்த அனுமதி கிடையாது. வாகனங்களில் வருபவர்கள் சாலையில் நிறுத்தி இறங்கினால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும். வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்தி இறங்க வேண்டும். மாநாட்டுத் திடலுக்கு அருகில், கிழக்கு கடற்கரை சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.மாநாட்டுத் திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது. கிழக்கு கடற்கரை சாலையை பொதுமக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். மாமல்லபுரம் மற்றும் பிற சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.திருவண்ணாமலைக்கு பவுர்ணமி விழாவிற்கு அதிகமான வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இதனால், சென்னையிலிருந்து மேற்கு மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், வேலுார், திருப்பத்துார், சேலம் வழித்தடம் மற்றும் மறு மார்க்கத்தில் சேலம், திருப்பத்துார், வேலுார் வழித்தடத்தையும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.