மேலும் செய்திகள்
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
21-Apr-2025
செங்கல்பட்டு:சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சாலையில் உள்ள கொடிக் கம்பங்களை அரசியல் கட்சிகள் அகற்றாமல் உள்ளது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பெரிய பெரிய கொடிக் கம்பங்கள் அமைத்தனர்.இந்த கொடிக்கம்பங்கள், சாலையின் அருகில் நடப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசினால், கொடிக்கம்பங்கள் சாலையில் விழும் நிலையில் உள்ளன.இதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது, இடையூறாக சாலைக்கு மிக அருகில் உள்ள கொடிக்கம்பங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளில் உள்ள இதுபோன்ற கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என, தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதற்கிடையில், தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, 'பொது இடங்களில் உள்ள தி.மு.க.,வின் கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டும்' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், கட்சியினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு, கடந்த 21ம் தேதியுடன் முடிந்தது.ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.எனவே, பெரிய விபத்துகள் நடப்பதற்குள், இதுபோன்ற கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற, தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21-Apr-2025