உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பவுஞ்சூரில் காவல் நிலையம் அமைக்க கோரி பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

பவுஞ்சூரில் காவல் நிலையம் அமைக்க கோரி பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

பவுஞ்சூர்:பவுஞ்சூரில் செயல்படும் காவல் நிலையத்தை, கடுகுப்பட்டு பகுதிக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், பவுஞ்சூர் பஜார் பகுதியில் புதிய காவல் நிலைய கட்டடம் அமைக்க வேண்டும் என, பவுஞ்சூர் மற்றும் திருவாதுார் கிராமத்தினர் சார்பாக, பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சப் - டிவிஷன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜி-10 அணைக்கட்டு காவல் நிலையம் செயல்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு செய்யூர் காவல் நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, அணைக்கட்டு காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. புதிய அரசு கட்டடம் எதுவும் காலியாக இல்லாததால், பவுஞ்சூர் பஜார் வீதியில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான பழைய குடியிருப்பு கட்டடத்தில், காவல் நிலையம் துவங்கப்பட்டது. தற்போது வரை, அதே கட்டடத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. காவல் நிலையத்தில் தற்போது காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், பெண் போலீசார் உட்பட 13 போலீசார் பணியாற்றுகின்றனர். கைதிகள் அறை, ஓய்வு அறை, ஆயுத தடவாளங்கள் அறை, சொத்துகள் வைப்பறை என, எந்தவித வசதியும் இல்லை. குறிப்பாக, போதிய கழிப்பறை வசதி இல்லாமல் போலீசார் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய காவல் நிலைய கட்டடம் அமைக்க வேண்டும் என போலீசார் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பவுஞ்சூர், விழுதமங்கலம், ஜல்லிமேடு ஆகிய பகுதிகளில் புதிய காவல் நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் அரசு புறம்போக்கு இடம் இல்லாததால், கடுகுப்பட்டு கிராமம் சர்வே எண் 48ல், ஒரு ஏக்கர் கல்லாங்குத்து வகைப்பாட்டை சேர்ந்த நிலத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட உள்ளன. இந்நிலையில், பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே சர்வே எண் 176ல் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் மக்களின் பாதுகாப்பை கருதி, பவுஞ்சூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பவுஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பவுஞ்சூர் பஜார் பகுதியில் காவல் நிலையம் அமைக்க அரசு புறம்போக்கு இடம் இல்லாததால், கடுகுப்பட்டில் காவல் நிலையம் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. பஜார் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, மார்க்கெட், வங்கி போன்றவை செயல்படுகின்றன. மேலும் ஏராளமான கடைகள் உள்ளதால், அதிக மக்கள் போக்குவரத்து இருக்கும் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !