பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மறைமலை நகர், பாலுார் சாலையிலுள்ள பெரிய பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாலுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, 13 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும், நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன.போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து, அதிக அளவில் புழுதி பறக்கிறது.இந்த புழுதி பகுதி முழுதும் பரவி, மணல் குவியலாக குவிந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, மணல் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு எரிச்சல் ஏற்பட்டு, தவறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.அத்துடன், சாலையில் பல இடங்களில், பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. எனவே இந்த பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.