| ADDED : நவ 27, 2025 04:35 AM
கல்பாக்கம்: சென்னை அணுமின் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து, மீண்டும் மின் உற்பத்தி துவக்கப்பட்டு உள்ளது. கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி திறனில், யூனிட் - 1, யூனிட் - 2 ஆகிய மின் உற்பத்தி அலகுகள் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு, யூனிட் - 1ல் தொழில்நுட்ப பழுது ஏற்பட்டு சரி செய்ய முடியாமல், தற்போது வரை மின் உற்பத்தி செய்யப்படாமல், முடங்கியே உள்ளது. யூனிட் - 2 மட்டுமே இயங்கி, முழு உற்பத்தி திறனில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த யூனிட்டிலும், தொழில்நுட்ப பழுது காரணமாக, கடந்த ஜன., 31ம் தேதி மின் உற்பத்தியை நிறுத்தி, பழுது நீக்கி, மார்ச் 2ம் தேதி உற்பத்தி துவக்கப்பட்டது. இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, கடந்த செப்., 1ம் தேதி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது இந்த யூனிட்டில் முழுமையாக பராமரிப்பு பணிகள் முடிந்து, தற்போது மீண்டும் மின் உற்பத்தி துவக்கப்பட்டதாக, நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.