சொத்து அபகரிப்பு தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை: போலி ஆவணம் வாயிலாக, 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, எல்லைபிள்ளை சாவடி, சித்தானந்த நகரை சேர்ந்தவர் கீதா பத்மநாபன், 69. அவரது பாட்டி பத்மாசினி அம்மாளுக்கு சொந்தமாக, எழும்பூர் கெங்கு ரெட்டி சாலையில், 2,077 சதுரடியில் வீடு உள்ளது. இந்த சொத்தை சிலர் போலி ஆவணம் வாயிலாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் அபகரித்து, 2.15 கோடி ரூபாய்க்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், முக்கிய குற்றவாளியான, செல்வராஜ் என்பவரை, 2024ல் கைது செய்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த கிஷோர் குமார், 48, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.