வெள்ளத்தால் சேதமான பாலம் சீரமைப்பு
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தியிலிருந்து வடமணிப்பாக்கம், அனந்தமங்கலம் வழியாக திண்டிவனம் வரை செல்லும், பிரதான மாநில நெடுஞ்சாலை உள்ளது.இது, செங்கல்பட்டு மாவட்டத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் கிராமங்கள் வழியாக இணைக்கும் சாலை.இதை, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, வடமணிப்பாக்கம் அடுத்த சென்னேரி பகுதியில், கழனிவெளிப் பகுதியில் இருந்து தண்ணீர் செல்லும் வகையில், சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.இந்த பாலம், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், நேற்று முன்தினம் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.இது குறித்து அச்சிறுபாக்கத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதன்படி வந்த நெடுஞ்சாலைத் துறையினர், நேற்று அங்கு புதிதாக பாலம் அமைத்து, ஜல்லி கற்கள் கொட்டி சீரமைத்தனர்.தற்காலிகமாக பாலம் சீரமைக்கப்பட்டதால், போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.நிரந்தர தீர்வாக, புதிதாக கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.